search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்கள் உடைப்பு"

    நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திவரும் 48 மணி நேர வேலை நிறுத்தத்தால் வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் வன்முறையும் வெடித்தது. #Bharatbandh #Centretradeunions
    புதுடெல்லி:

    பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனங்களை தனியார் துறையிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம், குறைந்தபட்ச சம்பள விகிதத்தில் உயர்வு, தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி இயக்கங்களை சேர்ந்த தேசிய தொழிற்சங்கங்களான ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.யு.டி.யு.சி. ஆகியவை இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் (பாரத் பந்த்) ஈடுபடப்போவதாக அறிவித்தன.

    இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள், ஆட்டோ, பஸ் மற்றும் வாகன தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.

    இந்த தொழிற்சங்கங்களில் 20 கோடி தொழிலாளர்கள் இருப்பதாகவும் அவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று காலை தொடங்கிய வேலைநிறுத்தத்தால் கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் தொழிற்சங்கத்தினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். பல இடங்ளில் பஸ் போக்குவரத்தும் முடங்கியது.



    கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் திரளான தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் அம்மாநிலத்தின் முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா உள்பட பல நகரங்களில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரெயில்கள் தாமதமாக சென்றன. பயணிகள் கடும் பாதிப்பு அடைந்தனர். கொல்கத்தாவில் பல இடங்களில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கொல்கத்தா அருகே பராசாட் என்ற இடத்தில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் அந்த பக்கமாக வந்த பள்ளிக்கூட பஸ் மீது கல்வீசி தாக்கி சேதப்படுத்தினார்கள். நல்லவேளையாக இதில் மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    ஜாதவ்பூர் என்ற இடத்தில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதை தடுத்தபோது தொழிற்சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

    அசன்சால் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட மா.கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது.

    இதேபோல் அசன்சால் ஹிண்ட் மோடார் உள்பட மேற்கு வங்காளத்தின் பல இடங்களில் பஸ்கள் உடைக்கப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்து வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

    ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. இன்றைய வேலைநிறுத்தம் வடமாநிலங்களில் ஓரளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும். தமிழ்நாட்டில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

    பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்தும் இயல்பாக இயங்கி வருகிறது.  #Bharatbandh  #Centretradeunions
    தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து 20 பஸ்கள் உடைக்கப்பட்டது.
    நெல்லை:

    தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் வீடு பாளை மனகாவலம் பிள்ளை நகரில் உள்ளது.

    நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஜான்பாண்டியன் வீட்டு மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பினர்.

    இதனை கண்டித்து ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் கண்ணாடி உடைந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவில் ஜான் பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், பசுபதி பாண்டியனின் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநில இளைஞரணி செயலாளர் கண்ணபிரான் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டு கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக ஜான் பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பாளை உதவி கமி‌ஷனர் விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரான மானூர் பள்ளமடையை சேர்ந்த பாலமுருகன் (27), மாவடியை சேர்ந்த பன்னீர் முருகன் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். நேற்று இரவு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில இளைஞரணி செயலாளரான கண்ணபிரான் கைது செய்யப்பட்டார்.

    இதற்கு கண்ண பிரானின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பாளை, தச்சநல்லூர், ராமையன்பட்டி பகுதியில் கண்ணபிரான் ஆதரவாளர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் மாநகர பகுதியில் மட்டும் 9 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. நெல்லை புறநகர் பகுதியில் 3 அரசு பஸ்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன.

    இதுபோல இன்று அதிகாலையிலும் அரசு பஸ்கள் மீது கல்வீசப்பட்டன. இதில் 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மொத்தம் 20 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து கல்வீசியவர்களை தேடி வருகிறார்கள்.

    ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களான நடுவக்குறிச்சி செல்லபாண்டி, சுள்ளான், படுகையூர் பாஸ்கர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    அவர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை, பாளை பகுதியில் கூடுதல் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. 9 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    பா.ம.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலை வரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ஜெ. குரு நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு குருவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் அவர் மரணம் அடைந்தார்.

    மரணம் அடைந்த ஜெ. குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள காடுவெட்டிக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. ஜெ.குருவின் உடலுக்கு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மரணம் அடைந்த ஜெ.குரு 2001ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011ம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன் சுருட்டி, அரியலூர், உடையார் பாளையம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. நேற்றிரவு பொன்னேரி, கல்லாத்தூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் 9 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று அரியலூர் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்கள் இயங்கவில்லை. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் பிறந்தவர் குரு. இதனால் அவரது கிராமத்தின் பெயராலேயே காடுவெட்டிகுரு என அழைக்கப்பட்டார். அவருக்கு ஹேமலதா என்ற மனைவியும், விருதாம்பிகை என்ற மகளும், கனல் அரசு என்ற மகனும் உள்ளனர்.

    குருவின் உடலுக்கு இன்று காலை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். நாளை காலை வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டதாலும், அரசு பஸ்கள் இயங்காததாலும் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய பஜார்கள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    ×